Wednesday, April 22, 2009

எம் ஜி ஆரும் ரஜினியும் ஒரே மாதிரியா?



தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த இருவர் எம் ஜி ஆர் மற்றும் ரஜினிகாந்த்.
இவர்கள் இருவரின் அளவிற்கு வேறு எந்த தமிழ் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருக்கவில்லை எனலாம். இன்று "மக்கள் திலகம் எம் ஜி ஆர்" அவர்கள் உயிருடன் இல்லாவிடிலும் பல மக்களின் மனதில் உயிருடன் குடிகொண்டு இருக்கிறார். மற்றும் அவருடைய பாடல்கள் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்.


ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த எம் ஜி ஆர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெறுவார் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள். 1936 இல் சதி லீலாவதி என்ற படத்தில் நடித்தார். ஆனால் பிறகு வந்த "ராஜகுமாரி" திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியான 25 வருடங்களுக்கு தமிழ் திரைப்பட உலகில் ஒரு "நட்சத்திரமாக" திகழ்ந்தார். இவரை நம்பி படம் எடுத்த பலருக்கு இலாபமே கிடைத்தது. இவர் நடித்த படங்களில் "நாடோடி மன்னன், மலைக்கள்ளன், எங்க வீட்டு பிள்ளை, ஒளிவிளக்கு" ஆகிய படங்கள் பலரால் மறக்க முடியாதவை. மற்றும் இவரை இன்னும் தூக்கி நிறுத்திய விடயங்கள் என்றால் அதில் முக்கியமான முதலாவது விடயம் இவரது திரைப்பட பாடல்கள். இவரது புரட்சி பாடல்கள் எப்போதும் அழியாதவை. மற்றும் இவரது சண்டைக்காட்சிகள் புகழ் பெற்றவை, பல சண்டைக்காட்சிகளை இவரே "டூப்" இல்லாமல் செய்ய முயற்சிப்பார்.

முதலமைச்சர் ஆக முன்னமே இவர் பல மக்களுக்கு உதவி செய்தார். அதுவே இவரை அரசியல் ஆசனத்தில் அமரவைத்தது. அதிகமாக மக்களுடன் கோபம் கொள்ள விரும்ப மாட்டார்.

இவருடைய பாடல்களில் "நான் ஆணையிட்டால்" பாடல் இன்னும் என்னை கவர்ந்த ஒன்று.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணசித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கதொடங்கி பின்னர் சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு முன்னேறிய நடிகர் ரஜினிகாந்த்.

"பைரவி, பில்லா, முரட்டுக்காளை, பிரியா" போன்ற படங்கள் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது.

எம் ஜி ஆர் க்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் இவர் என்றால் அது மிகையாகாது.
எம் ஜி ஆரைப்போலவே இவருடைய படப்பாடல்களும் பிரபலமானவை. மற்றும் தமிழ் சினிமாவின் முதல் "ஸ்டைல்" நாயகனும் இவர்தான், "சிகரட்"டை ஸ்டைலாக புகைப்பது அதில் முக்கியமான ஒன்று. மற்றும் நகைச்சுவை காட்சிகளில் திறமையானவராக இருந்தார். "தில்லு முள்ளு" படம் சூப்பர் ஹிட் ஆனது பலரின் நினைவில் இருக்கலாம். ஆனால் இவர் எம் ஜி ஆரை போல் சண்டை காட்சிகளில் அதிகம் சிரம் எடுக்க விரும்பமாட்டார். ஆனால் "அண்ணாமலை, ரங்கா, வீரா, பாட்ஷா" போன்ற படங்களில் சிறப்பாக சண்டை செய்தார்.

மற்றும் இவருடைய ரசிகர்கள் வீட்டு சாமி அறையில் இவரும் ஒரு "கடவுள்" ஆக இருக்கிறார். எம் ஜி ஆரைப்போலவே இவரும் பல மக்களுக்கு உதவி செய்தார் எனலாம்.

அரசியல் விடயங்களை தவிர இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்களை கொண்டவர்கள்.

என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பிறகு வேறு யாரும் "சூப்பர் ஸ்டார்"களாக வலம் வரமுடியாது.

அரசியல் விடயங்களை தவிர இவர்கள் இருவரும் மக்கள்

Saturday, April 18, 2009

அஜித் - இலகுவில் புரிந்துகொள்ள முடியாத பாத்திரம்..


உலகில் வெளிப்படையான கருத்துகள், உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்கள் நிறைந்த பிரபலங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரலிடுவோர் பலர் உள்ளனர். இந்தியாவில் எடுத்துகொண்டால் முன்னால் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி மற்றும் தமிழ் நடிகர் அஜித்குமார்..பல எதிர்ப்புகள் மற்றும் பாராட்டுக்களுக்கிடையில் இவர்கள் சாதித்து இருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.

தமிழ் சினிமா வரலாற்றில் பல எதிரிகளையும் அதற்கு நிகராக பல ரசிகர்களையும் வைத்திருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் சிறு குழந்தை கூட சரியாக பதில் சொல்லும்..
அது வேறு யாரும் அல்ல...அஜித்..

இவருடைய குணங்களுக்கு விரோதமாக இருக்கும் மக்கள் பலர். அதே போல் இவருடைய குணங்களை பார்த்து இவருக்கு ரசிகர்களான மக்களும் மிகவும் பலர்.

முள் பாதையில் தன் வெற்றி கொடியினை "தன்னம்பிக்கை" என்ற ஒரு சொல்லினால் நாட்டிவருபவர். அதிகம் அலட்டிக்கொள்ளாத ஒரு நடிகர் என பல ஊடகங்கள் இவரை புகழ்ந்துள்ளன. வெளிப்படையாக பேசக்கூடியவர் என்றும் பல ஊடகங்கள் இவரை கூறிவந்துள்ளன.

சினிமாவில் அறிமுகமான வேளையில் ஒரு மிகப்பெரிய வாகன விபத்தில் சிக்கினார்.
"இவருடைய காலம் இனிமேல் சரிதான்" என்று கூறி சில நாட்களுக்குள் யாரும் எதிர்பாரா விதமாக சரிவிலிருந்து மீண்டு வந்தார். மீண்டவுடன் "காதல் கோட்டை" "ஆசை" ஆகிய சூப்பர் ஹிட் படங்களும், "உல்லாசம்" "பவித்ரா" என்ற சுமாரான படங்களும் தந்து இளம் நடிகர்களில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

அதன் பிறகு "காதல் மன்னன்" என்ற வெற்றிப்படத்தை தந்தார். அருமையான திரைக்கதையினால் அப்படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு "வாலி" "அமர்க்களம்" "ஆனந்த பூங்காற்றே" "முகவரி" "கண்டுகொண்டேன்" ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் நான் ஒரு நட்சத்திர நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார்.

"இலகுவில் நட்பு வைத்துக்கொள்ள விரும்பாத ஒரு நடிகர்" என்ற ஒரு பெயர் இவருக்கு சில சினிமா புள்ளிகளால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு இவர் நடித்த "தீனா" "சிட்டிசன்" ஆகிய படங்கள் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை வாங்கித்தந்தது. தொடர்ச்சியாக சில சுமாரான படங்களாக "பூவெல்லாம் உன் வாசம்" "ரெட்" ஆகியன வெளிவந்தன. தொடர்ந்து வந்த "ராஜா" தோல்வியை தழுவியது.

அதன் பிறகு வந்த "வில்லன்" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகுதான் பல சிக்கல்கள் இவருக்கு உருவாகின. நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அதனை "ஆஞ்சநேயா" படம் நிரூபிக்கும் என்று கூறினார். இந்த கருத்து பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றும் ஆஞ்சநேயா படமும் தோல்வியடைந்தது. அதன் பிறகு வந்த "ஜனா" அவர் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தந்தது. மற்றும் சக நடிகர்களுடன் அவரை ஒப்பிட்டு வேறுபடுத்தி பார்த்ததால், குறிப்பாக விஜய்யுடன் அவரை போட்டியாக வைத்து பார்த்ததால் அவருக்கு பல எதிர் ரசிகர்கள் உருவாகினர் (அன்றைய சிவாஜி- எம் ஜி ஆர், கமல் - ரஜினி கூட்டணிகளுக்குள் இவ்வாறான ஒரு பிரச்சினைகள் உருவானதில்லை)

மற்றும் எளிதில் அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசிய வார்த்தைகள் பல சர்ச்சைகளை தோற்றுவித்தன. விழாக்களுக்கு சமூகமளிக்காமை, எதையும் கண்டுகொள்ளாமை என்று பலரால் விமர்சிக்கப்பட்டார். மற்றும் சத்தமில்லாமல் உதவி செய்தல் தனது ரசிகர் மன்றத்தை "நற்பணி மன்றமாக" மாற்றியமை ஆகியவற்றால் பலரிடமிருந்து புகழ் வந்து சேர்ந்தன.

தொடர்ந்து வந்த "அட்டகாசம்" திரைப்படம் வெற்றிபெற்றது, ஆனாலும் அடுத்து வந்த "ஜி" தோல்வியடைந்தது. தொடர்ந்து நடித்த "பரமசிவன்" ஓரளவு பெயரை வாங்கித்தந்தது. மற்றும் "திருப்பதி" சுமாராகவே ஓடியது. பின்னர் வந்த "வரலாறு" அவரை மீண்டும் உயர்நிலைக்கு அடைய உதவியது, அதன் பிறகு வந்த "கிரீடம்" ஹிட் ஆனது. ஆனால் "பில்லா" என்ற ரீமேக் படம் அவரை மீண்டும் சிகரத்தை அடைய உதவியது. ரஜினி படங்களுக்கு போட்டியாக வசூலை அள்ளித்தந்தது.மற்றும் சக நடிகர்களுடன் நட்புடன் பழகியமை, விழாக்களுக்கு சமூகமளித்தமை ஆகியவை இவருக்கு நல்ல பெயரை அள்ளித்தந்தன. இறுதியாக வந்த ஏகன் பெரிதாக ஓடவில்லை. அதாவது "சுமார்" ரகமே. மற்றும் "ஈழ தமிழர்களுக்காக நான் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்" என்று இவர் கூறியதாக சர்ச்சைகள் எழுந்தன. அதனை அவர் மறுத்தார்.

தற்போது அவருடைய பிறந்தநாள் விழாக்களை கொண்டாட வேண்டாம் என்றும் "இலங்கை தமிழர்கள்" கஷ்டப்படும் வேளையில் நான் பிறந்தநாள் கொண்டாடுவது உகந்ததல்ல என்று கூறி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உள்ள இளம் நடிகர்கள் பலர் இவரை ஒரு ரோல் மொடேலாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆர்யா, சிம்பு, நகுல், ரவி போன்றோர் ஆவர். இவற்றில் சிம்புவும் ஆர்யாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவருடைய முன்னேற்ற பாதைகள் விரும்பாமல் இவரை திட்டி தீர்ப்போர் பலர் உள்ளனர். அப்படியிருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்துடன் நிலையான இடத்தில் இருப்பது ஒரு ஆச்சரியமான விடயமே.

இப்படி ஒரு கடின வாழ்க்கையை தாண்டி முன்னேறிய இவரை திட்டுவதற்கு மற்றவர்களுக்கும் தகுதி இருக்க வேண்டும்.

எனது இறுதி கருத்து "சினிமா என்பது திட்டி தீர்ப்பதற்கு உருவானதல்ல.."